search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாடு கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
    X
    மணப்பாடு கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து குதூகலமாக கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
    உடன்குடி:

    திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு கடற்கரையில் சுமார் 60 அடி உயரத்தில் கல்லும் மணலும் சேர்ந்து இயற்கையாக உருவான மணல் குன்று இந்த ஊருக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

    இந்த மணல் குன்றின் மீது திருச்சிலுவை நாதர் ஆலயம், ஆலயத்திற்குப் பின்புறம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கடல் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு, கடல் வழியாக ஊடுருவலை தடுக்க உயரமான கண்காணிப்பு கேமரா உள்ளது.

    மேலும் தமிழ் படிக்க இங்கு வந்த புனித சவேரியார் தங்கி இருந்த குகை, நாழிக்கிணறு, தியான மண்டபம் ஆகியன மணல் குன்றின் மீது அமைந்துள்ளது.

    கடற்கரையில் கடல் அலைகள் தொட்டு செல்லும் அளவிற்கு அமைந்துள்ள கிணறுகளில் கிடைக்கும் சுவையான குடிநீர் இந்த மணப்பாடு கிராம மக்களுக்கு மட்டும் இல்லாமல் இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறந்த குடிநீராக பயன்படுகிறது.

    மேலும் திருச்செந்தூரில் இருந்து உவரி கன்னியாகுமரி செல்லும் கடற்கரைசுற்றுலா சாலையில் மணப்பாடு அமைந்திருப்பதால் சாதாரண நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    கடந்த சில நாட்களாக பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து மணப்பாட்டில் குவிந்தனர்.

    வீடுகளில் சமைத்த உணவுகளை இங்கு கொண்டு வந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். கடற்கரையில் கிராமப்புற விளையாட்டுகளை விளையாடி குழந்தைகளும் பெரியவர்களும் மகிழ்ந்தனர். பின்னர் கடலில் குடும்பத்தினருடன் நீராடி மகிழ்ந்தனர்.
    Next Story
    ×