search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் சப் -இன்ஸ்பெக்டரை தாக்கிய மில் அதிபர் கைது

    வாகன சோதனை செய்த போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    வாகன சோதனை செய்த போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மில் அதிபர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்துவன், ஏட்டு கந்தசாமி மற்றும் போலீசாருடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த நபர், முறையாக பதில் அளிக்க வில்லை. இதையடுத்து காரின் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கேட்டார்.

    இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் காரில் இருந்து இறங்கி சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரனிடம் தகராறு செய்தார்.

    பின்னர் அவர், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் எதிர்பாராதநேரத்தில் திடீரென்று தாக்கினார். உடனே அங்கிருந்த மற்ற போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கிப்பிடித்தனர்.

    இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியை சேர்ந்த அர்பித் ஜெயின் (வயது36) என்பதும், அவர் மில் அதிபர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×