search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் தொழிலாளி வெட்டிக்கொலை

    பொங்கல் பண்டிகையை கொண்டாட கோவையில் இருந்து ஆலங்காயம் அருகே சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலாளியை மர்மநபர்கள் வெட்டிக்கொன்று, உடலை கோணிப்பையில் கட்டி விவசாயக் கிணற்றில் வீசினர்.
    வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் வெள்ளக்குட்டை அருகில் மராட்டி தெரு பஸ் நிறுத்தம் உள்ளது. அந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய விவசாயக் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றில் கோணிப்பை மூட்டை கிடப்பதாக, அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து விட்டு, உடனே ஆலங்காயம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயக் கிணற்றில் கிடந்த கோணிப்பை மூட்டையை மேலே எடுத்துப் பாா்த்தனர். அந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    போலீசார், கோணிப்பை மூட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக இருந்தது தெரிந்தது. அவரின் உடல் முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது.

    இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். வெள்ளக்குட்டை பகுதியில் எருது விடும் விழா நடந்ததைப் பார்க்கச் சென்று விட்டு, ஆலங்காயத்தை நோக்கி திரும்பி கொண்டிருந்த வாலிபர்களும், கிராம மக்களும் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் பிணத்தை வேடிக்கை பார்த்தனர்.

    அதில் ஒருவர், கோணிப்பையில் இருந்த வாலிபரின் உடலில் பச்சை குத்தியிருந்த பெயரை பார்த்து விட்டு, கொலை செய்யப்பட்டவர் ஆலங்காயத்தை அடுத்த பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 30) எனப் போலீசாரிடம் அடையாளம் காட்டினார். கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்து, அவர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். கோணிப்பையில் பிணமாக இருந்தவர் தங்களின் மகன் நாகராஜ் என்பதை போலீசார் முன்னிலையில் பெற்றோர் உறுதி செய்தனர். அப்போது அவரின் பிணத்தைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

    விவசாயக் கிணற்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வாலிபர் நாகராஜ் கோவையில டைல்ஸ் கற்கள் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகையைக் கொண்டாட விடுமுறையி்ல் வீட்டுக்கு வந்தவர், எனப் பெற்றோர் கூறினர். அவரை மர்மநபர்கள் கொலை செய்து உடலை கோணிப்பையில் கட்டி தூக்கிச்சென்று விவசாயக் கிணற்றில் வீசியிருப்பது தெரிய வந்தது. ஆனால் கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் யார், எதற்காக நாகராஜை கொலை செய்தார்கள், கொலைக்கான காரணம் என்ன? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×