search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெட்டையூரணி கிராமத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்கள்.
    X
    ரெட்டையூரணி கிராமத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்கள்.

    தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்-சாலைகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள், சாலைகள் தண்ணீரில் மூழ்கின.
    பனைக்குளம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதிலிருந்தே பரவலாக நல்ல மழை பெய்தது. அதுபோல் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக இருக்க வேண்டிய இந்த சீசனில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே தமிழகம் முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாகவே இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்துள்ளது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் மண்டபம் யூனியனுக்குட்பட்ட உச்சிப்புளி அருகே உள்ள தாமரைக்குளம், ரெட்டையூரணி, கீழகளிமண்குண்டு, கடுக்காய்வலசை, சூரங்காட்டு வலசை உள்ளிட்ட அந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன.

    மேலும் பிரப்பன்வலசையில் இருந்து தாமரை குளம் மற்றும் ரெகுநாதபுரம் வழியாக செல்லும் சாலைகளில் இரண்டு இடங்களை மழை வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மழை வெள்ளத்தில் தத்தளித்தபடி தான் செல்கின்றன.

    இதுபற்றி கடுக்காயை சேர்ந்த விவசாயி முனியசாமி என்பவர் கூறும்போது, கடந்த ஆண்டும் அதிக அளவு பெய்த மழையால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. இந்த ஆண்டும் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவு பெய்துள்ள மழையால் விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத அளவிற்கு மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.

    எந்த ஆண்டும் இது போன்று பனி சீசனில் தொடர்ச்சியாக மழை பெய்தது கிடையாது. தற்போது தான் பனி சீசனில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த மழையால் தற்போது விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×