search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள் தி.மு.க.வில் சேர்ந்தபோது எடுத்தபடம்.
    X
    ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள் தி.மு.க.வில் சேர்ந்தபோது எடுத்தபடம்.

    ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 3 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர்

    ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 3 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தி.மு.க.வில் சேர்ந்தனர். மு.க.ஸ்டாலினால் மட்டுமே நல்லாட்சியை தர முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 30 ஆண்டு கால எதிர்பார்ப்பு பொய்த்த நிலையில், அவரது ரசிகர்கள் ஒன்று திரண்டு வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியபோதும் ரஜினிகாந்த் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

    இதைத்தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளில் இணைய தொடங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 200 நிர்வாகிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

    இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின் (தூத்துக்குடி), கே.செந்தில் செல்வானந்த் (ராமநாதபுரம்), ஆர்.கணேசன் (தேனி) மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர்.

    அங்கு அவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    ஒரே நாளில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 3 பேர் மற்றும் நிர்வாகிகள் தி.மு.க.வில் சேர்ந்தது ரஜினி மக்கள் மன்ற தலைமையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    தி.மு.க.வில் சேர்ந்தது குறித்து ஜோசப் ஸ்டாலின் கூறும்போது, “தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் எங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டோம். அதுமட்டுமல்லாது, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த மேலும் பல நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவார்கள்” என்று தெரிவித்தார்.

    அதேபோல், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் தி.மு.க.வில் சேர்ந்தார்.

    அப்போது துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணைத்தலைவர் தே.மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×