search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதார பணியாளர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டபோது எடுத்தபடம்.
    X
    சுகாதார பணியாளர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டபோது எடுத்தபடம்.

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்றுகாலை தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரி டீன் வள்ளி தலைமையில் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் முன்னிலையில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்கள், காவலாளிகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள தன்னார்வல தனியார் டாக்டர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது.

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸ்ரீவித்யா முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து திருப்பூர் தனியார் மருத்துவமனை டாக்டர் உஷா, அவினாசி தனியார் மருத்துவமனை டாக்டர் எமிலி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் காவல் பணி மேற்கொள்ளும் பெண் ஊழியர் மணிமேகலை, சுகாதார பணியாளர் லதா மற்றும் டாக்டர்கள் தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போட்டவர்கள் 30 நிமிடம் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்தனர். அவர்களுக்கு ஏதாவது ஒவ்வாமை, மயக்கம் உள்ளிட்டவை ஏற்படுகிறதா? என்று கண்காணித்தனர். 30 நிமிடம் கழித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாளுக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி டீன் வள்ளி கூறியதாவது:-

    முதல் கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள தன்னார்வலர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தன்னார்வலர்கள் வயது அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. கோவிஷீல்டு என்ற மருந்து 0.5 மில்லி அளவு தடுப்பூசி மருந்து போடப்படுகிறது. 28 நாட்கள் கழித்து இதே மருந்தை மீண்டும் ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும்.

    கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது. தற்போது தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடக்கூடாது. வேறு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் இந்த தடுப்பூசி போட முடியாது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 30 நிமிடம் டாக்டர் குழுவினர் கண்காணிப்பாளர்கள். அவர்களுக்கு ஏதாவது பக்க விளைவுகள் இருக்கிறதா? என்பதை தீவிரமாக கண்காணிப்பாளர்கள். தொந்தரவுகள் ஏதேனும் அவர்களுக்கு இல்லை என்றால் அவர்கள் வழக்கமான பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    28 நாட்கள் கழித்து அவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை தான் மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டும். ஆயிரத்து 100 டோஸ்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 500 பேருக்கு இந்த தடுப்பூசி போட முடியும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களும் மது அருந்தக்கூடாது. தலைசுற்றல், வாந்தி, மயக்கம் எதுவாக இருந்தாலும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். உணவு பழக்கவழக்கங்கள் எதுவும் மாற்றத்தேவையில்லை. வழக்கமான உணவை சாப்பிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள் 16 ஆயிரத்து 400 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு முதல்கட்டமாக 13 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 4 மையங்களிலும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு மையத்தில் 100 பேர் வீதம் தடுப்பூசி போடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வந்ததும் அடுத்தடுத்து முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×