search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இன்று தடுப்பூசியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போட்டுக்கொண்ட காட்சி.
    X
    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இன்று தடுப்பூசியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போட்டுக்கொண்ட காட்சி.

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்

    தமிழகம் முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக 166 மையங்களில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்திருந்தார். இதையடுத்து அவர் இன்று காலை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

    மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நான் பதிவு செய்திருந்தேன். அதற்காக நான் இன்று காலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். மருத்துவ துறையை சார்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முதல் கட்டமாக இந்த கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    இன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. மதுரையில் செயல்படுகின்ற கொரோனா தடுப்பூசி மையத்தில் அதிகப்படியாக 111 பேர் முதல் நாளான நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.

    இரண்டாவதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 100 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 166 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் 25, 60, 70 என்ற விகிதங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவை தடுக்க தடுப்பூசி முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா உச்சக் கட்டத்தில் இருந்தபோது, அதனை தடுக்க ஆர்.டி. பி.சி.ஆர்., ஸ்கேனிங் உள்ளிட்ட இரண்டு சோதனைகள் முக்கியமாக இருந்தது. தமிழகத்தில் தற்போது இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

    ஏனென்றால் விடுமுறை நாட்கள் என்று கூட பார்க்காமல் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் பணியாற்றி வருவதே கொரோனா குறைவதற்கு முக்கிய காரணமாகும். முதல்வரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

    தற்போது கொரோனா தடுப்பூசியை சென்னையில் அதிகமானோர் போட்டு வருகின்றனர். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசியை போடவைப்பதில்லை. இரண்டாவது அலையை தடுக்க முக்கியமாக இந்த கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை. அதேபோல் தமிழகம் முழுவதும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×