search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தடுப்பூசி போட்டுக்கொண்ட போது எடுத்த படம்.
    X
    டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தடுப்பூசி போட்டுக்கொண்ட போது எடுத்த படம்.

    கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்ப்பது நல்லது அல்ல- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் வேண்டுகோள்

    கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்ப்பது நல்லது அல்ல என்றும், தடுப்பூசி போடுவதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் இருக்காது என்றும் அப்பல்லோ டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தெரிவித்தார்.
    சென்னை:

    கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளிலும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

    அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதில் அப்பல்லோ மருத்துவமனையின் குடல் சார்ந்த ஜீரண கோளாறு பகுதிக்கான தலைமை மருத்துவர் கே.ஆர்.பழனிசாமியும் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி தொடர்பாகவும், அதன் அவசியம் குறித்தும் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி நானும் போட்டுக்கொண்டேன். எந்த வலியும் எனக்கு இல்லை. தடுப்பூசி போடுவதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் இருக்காது. தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் மட்டும் லேசான வலி இருக்கலாம். சிலருக்கு லேசான தலைவலி, காய்ச்சல் வரலாம். இது பொதுவானதுதான். இதற்காக தடுப்பூசியை தவிர்ப்பது நல்லது அல்ல. தடுப்பூசி என்பது இப்போது இருக்கின்ற காலத்தில் மிகவும் முக்கியம்.

    கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது என்று சொன்னாலும், ஆங்காங்கே புதிய தொற்றுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியம். இந்தியாவில் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் பாதிப்புகள் அனைத்தையும் பார்த்த பிறகுதான் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் பக்க விளைவுகள் இல்லை. சிலருக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம் வரலாம். அதுபற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    சிலர் தடுப்பூசி போட பயப்படுகிறார்கள். அந்த பயம் தேவையில்லை. வெளிநாடுகளில் கூட தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டனர். யார் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். எங்களுடைய அப்பல்லோ குழுமத்தின் தலைவரும் தடுப்பூசி போட்டு இருக்கிறார். மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர்களும் போட்டிருக்கின்றனர்.

    சுகாதாரப்பணியாளர்கள் கண்டிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதனை போடுவதற்கு தயங்கக்கூடாது. பொதுமக்கள் ஆபத்தின் உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பயப்பட வேண்டாம் என மத்திய-மாநில அரசுகள் அதிகளவில் விழிப்புணர்வை நடத்தி, அதன் மூலம் மக்களுக்கு பயமின்மையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்பல்லோ மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, மூத்த டாக்டர்கள், நர்சுகள் என 60 பேருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி நேற்று மாலை தெரிவித்தார்.
    Next Story
    ×