search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேல்கூரை இடிந்து விழுந்துள்ள காட்சி.
    X
    அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேல்கூரை இடிந்து விழுந்துள்ள காட்சி.

    குடவாசலில் தொடர் மழை- அரசு பள்ளி வகுப்பறை இடிந்து விழுந்தது

    குடவாசலில் தொடர் மழை காரணமாக அரசு பள்ளி வகுப்பறை இடிந்து விழுந்தது. விடுமுறை என்பதால் பள்ளி மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாசில்தார் அலுவலகம் எதிரே குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பள்ளியின் மேல் மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த வகுப்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.

    கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் பள்ளி மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறுகிறார்கள்.

    குடவாசல் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி வகுப்பறை திடீரென இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வகுப்பறை இடிந்து விழுந்ததை அறிந்த திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, குடவாசல் தாசில்தார் ராஜன்பாபு ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

    இடிந்து விழுந்த கட்டிடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. அரசு கட்டிடங்கள் ஆயுட் காலம் 30 ஆண்டுகள் உள்ள நிலையில் 10 ஆண்டுகளிலேயே பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். தமிழக அரசு வருகிற 19-ந் தேதி பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் பள்ளி கட்டிடம் இடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி கட்டிடங்களை உரிய முறையில் ஆய்வு செய்து கட்டிடத்தின் உறுதி தன்மை அறிந்த பின்னர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முறையாக கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×