search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பணை உடைக்கப்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு அடைத்த போது எடுத்த படம்
    X
    தடுப்பணை உடைக்கப்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு அடைத்த போது எடுத்த படம்

    சின்னாளபட்டி அருகே தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்களுக்கு அபராதம்

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில், வனத்துறை சார்பில் சாமியார் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீர் முருகன்பட்டி, சாமியார்பட்டி, தொப்பம்பட்டி மற்றும் காந்திகிராமம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு செல்லும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் இந்த தடுப்பணை நிரம்பவில்லை.

    சிறுமலை பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் சாமியார் ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த தண்ணீர் முருகன்பட்டி கண்மாய்க்கு குறைவாக வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன்பட்டி ஊரை சேர்ந்த தமிழழகன், சந்திரசேகர், முத்துக்குமார் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட 10 வாலிபர்கள் தடுப்பணையின் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தி தங்கள் ஊருக்கு தண்ணீரை திருப்பியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சேதப்படுத்தப்பட்ட தடுப்பணையை பார்வையிட்டு அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் தடுப்பணையில் உடைக்கப்பட்ட இடத்தை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தடுப்பணையை சேதப்படுத்தியதாக தமிழழகன், சந்திரசேகர், முத்துக்குமார் உள்பட 10 வாலிபர்களுக்கு வனத்துறையினர் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×