search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எாிந்ததை படத்தில் காணலாம்.
    X
    லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எாிந்ததை படத்தில் காணலாம்.

    உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் லாரி-மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது- தனியார் நிறுவன ஊழியர் பலி

    உளுந்தூர்பேட்டை அருகே பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊருக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலியானார். விபத்துக்குள்ளான லாரியும், மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    உளுந்தூர்பேட்டை:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவா் பிரவீன் குமார்(வயது 25). டிப்ளமோ படித்துள்ள இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் டெக்னீஷியனாக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரவீன்குமார் சென்னையில் இருந்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அதிகாலை 3.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் தீ அந்த லாரிக்கும் பரவியதை அடுத்து லாரியும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சில நிமிடங்களுக்குள் 2 வாகனங்களும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தன.

    இதுபற்றிய தகவல் அறிந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் புறவழிச்சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி மாற்று வழியில் திருப்பி அனுப்பினர். தகவலின் பேரில் விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினர் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து விபத்தில் பலியான பிரவீன் குமாரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×