search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையை சீரமைக்ககோரி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித கப்பல் விடும் போராட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    சாலையை சீரமைக்ககோரி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித கப்பல் விடும் போராட்டம் நடைபெற்ற காட்சி.

    திருப்பூரில் சாலையை சீரமைக்ககோரி காகித கப்பல் விடும் போராட்டம்

    திருப்பூர், முத்தணம்பாளையம், அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நகரில் சேர்ந்த பொதுமக்கள் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி தேங்கி நிற்கும் மழை நீரில் காகித கப்பல்விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நல்லூர்:

    திருப்பூர் மாநகராட்சி, 36-வது வார்டு, முத்தணம்பாளையம், அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நகர், குருவாயூரப்பன் நகர், கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதிக்கு மாநகராட்சியால் இது வரை அடிப்படை வசதிகளான தார் சாலை, தெரு விளக்கு, குப்பை தொட்டி, பொது குடிநீர் குழாய், அமைக்க கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி உள்ளிட்ட அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை குறித்து மனு அளித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மிகவும் மோசமாக உள்ளதை கண்டித்து சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகித கப்பல் விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதி முத்தணம்பாளையம் ஊராட்சியாக இருந்து வந்தது. அதன் பிறகு மாநகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பூர் மாநகராட்சியுடன் இணைத்து 36-வது வார்டாக மாற்றப்பட்டு இருந்து வருகிறது.

    ஸ்ரீபாலாஜி நகர், கோடீஸ்வரன் நகர், குருவாயூரப்பன் நகர், உள்ளிட்ட பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 4000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இது வரை எங்கள் பகுதி மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாத பகுதியாகவே இருந்து வருகிறது.

    இதனால் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான தார்சாலை, தெரு விளக்கு, சாக்கடை வசதி, குப்பை தொட்டி, பொது குடிநீர் குழாய் உள்ளட்ட வசதிகள் செய்து தர மறுத்து வருகின்றனர். எங்கள் பகுதியை அங்கீகரிக்கப்பட்ட பகுதியாக மாற்றி அடிப்படை வசதிகள் செய்துதர கோரியும், மேலும் நீண்ட நாட்களாக எங்கள் பகுதி சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும், சகதியுமாக உள்ளதால் நடந்தும், வாகனத்தில் செல்லமுடியாத நிலையில் உள்ளது.

    அதனை அதிகாரிகள் கவனத்தை ஈர்க்க சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகிதத்தில் கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×