search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணையை படத்தில் காணலாம்.
    X
    முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணையை படத்தில் காணலாம்.

    தொடர் மழை எதிரொலி: முழு கொள்ளளவை எட்டும் வைகை அணை

    தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி, கம்பம், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    தொடர்ந்து பெய்யும் மழையால் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66 அடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 7 ஆயிரத்து 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 67.68 அடியாக உயர்ந்தது. இதையடுத்து 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதாலும் வைகை அணை இன்று (சனிக்கிழமை) தனது முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும். இதனால் உபரி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக திறப்பது என்பது குறித்து பொதுப்பணித்துறையினர் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி, வைகை அணை நிரம்பியதும் உபரியாக வரும் தண்ணீரில் 2 ஆயிரம் கனஅடி வரையில் பெரியாறு பாசன கால்வாயிலும், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 58-ம் கால்வாயிலும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்வாய்களில் திறக்கப்பட்டது போக மீதமுள்ள தண்ணீரை ஆற்றில் உபரியாக திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் உசிலம்பட்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×