search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    23-ந்தேதி முதல் கோவையில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி

    தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து காங்கிரசின் பலத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் காங்கிரஸ் தயாராகி வருகிறது. கூட்டணி கட்சியான தி.மு.க. ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டது.

    காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கடந்த முறை 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

    ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. பல தொகுதிகளை காங்கிரஸ் இழந்ததால் தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்கிற மனக்குறை தி.மு.க.விடம் உள்ளது.

    எனவே இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி, வேட்பாளர் என்ற அடிப்படையில் 25 தொகுதிகள் தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறைவான தொகுதியை ஏற்க காங்கிரஸ் தயங்குகிறது.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, ‘தி.மு.க.விடம் தேவையான தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். தேவையான என்பது குறைவான தொகுதிகள் அல்ல. எங்கள் செல்வாக்கும், பலமும் எங்களுக்கு தெரியும்’ என்றார்.

    அதன்படி முன்கூட்டியே தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து காங்கிரசின் பலத்தை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார்கள்.

    இந்த நிலையில் திடீரென்று நேற்று ராகுல்காந்தி மதுரை வந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டார். இந்த பயணத்தையும் தனது அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்.

    அவரது பயணத் திட்டத்தில் தாஜ் நட்சத்திர ஓட்டலில் தான் நேற்று மதியம் உணவு சாப்பிட நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை வேண்டாம் என்றும் பொது மக்களுடன் உணவு அருந்த ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். அதன் பேரில் பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

    தனது திட்டமிட்ட தேர்தல் பயணத்தை வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) கோவையில் தொடங்குகிறார்.

    கோவையில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி அங்கிருந்தபடியே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகிறது.

    கோவை பகுதி தொழில் நகரம் என்பதால் சிறு, குறு தொழில் அதிபர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என்று தனித்தனியாக கூட்டங்களில் கலந்துரையாடுகிறார்.

    தினமும் மாலையில் ஒரு பிரசார கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    பொதுக்கூட்டம் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

    ‘தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    பலத்தை காட்டி பலனை பெற காங்கிரஸ் திட்டமிடுகிறது. அதே நேரம் தி.மு.க. கூட்டணியிலும் 10 கட்சிகள் வரை இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது. அந்த கட்சிகளுக்கு எல்லாம் தொகுதி ஒதுக்கிவிட்டு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் வகையில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும் உறுதியாக இருக்கிறது.
    Next Story
    ×