search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பேருந்துகள்
    X
    அரசு பேருந்துகள்

    சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர் சென்று கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டன.

    கடைசி 2 நாட்கள் அதிகம் பேர் பஸ், ரெயில்களில் வெளியூர்களுக்கு சென்றனர். சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் மூலமாக சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    அதேபோல ஆம்னி பஸ்கள் மூலமாக 3 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். ஆம்னி பஸ்கள் கடந்த ஆண்டை விட குறைவாகவே இயக்கப்பட்டன. 300, 400, 500 என்ற அளவில் தான் பஸ்கள் இயக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் இந்த வருடம் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் பயணம் செய்ய முடிதாத நிலை உருவானதால் பெரும்பாலானவர்கள் கடைசி நேரத்தில் அரசு பஸ்களை நாடினார்கள். அரசு பஸ்கள் இரவு-பகலாக இயக்கப்பட்டதால் பொது மக்கள் பயணம் தடையில்லாமல் இருந்தது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு வரை வழக்கமான பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் மொத்தம் 9,868 இயக்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். விடிய விடிய தொடர்ந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வழக்கமான 2050 பஸ்களுடன் 2466 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 5,516 பஸ்கள் இயக்கப்பட்டன.

    3 நாட்களில் மொத்தம் 10,276 பஸ்கள் இயக்கப்பட்டதில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 712 பேர் பயணம் செய்துள்ளனர்.

    சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இயக்கப்பட்டு மக்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெளியூர் சென்ற பயணிகள் பொங்கல் முடிந்து வீடு திரும்ப வசதியாக பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்படுகறது. மொத்தம் 15 ஆயிரத்து 270 சிறப்பு பஸ்களை பல்வேறு நகரங்களில் இருந்து இயக்க திட்டமிட்டுள்ளது.

    19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் 18-ந் தேதிக்குள் வீடு திரும்புவார்கள். 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது.

    அதனால் பஸ், ரெயில்கள், கார்களில் சென்னைக்கு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சென்னைக்கு பல்வேறு நகரங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் போன்ற நகரின் வெளிப்பகுதியில் பஸ்களை நிறுத்தி அங்கிருந்து பயணிகளை மாநகர் பஸ்கள் மூலமாக நகருக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுகிறது.

    பொதுவாக வண்டலூர் சுற்றுவட்ட சாலையை கார் மற்றும் கனரக வாகனங்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×