search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தோட்டம் ஊராட்சியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    பூந்தோட்டம் ஊராட்சியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பூந்தோட்டம் கிராமத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்

    அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பூந்தோட்டம் கிராமத்தில் பொதுமக்கள் பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், பூந்தோட்டத்தில் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகி்ன்றனர். இந்த தெருவில் மக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாலை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள மண்சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேறும், சகதியுமாக உள்ள பூந்தோட்டம் ஆதிதிராவிடர் தெருவில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலா தலைமையில் மாவட்ட தலைவர் முகமது சலாவுதீன், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஜெயராஜ் மற்றும் பொதுமக்கள் கும்பகோணம்- மன்னார்குடி மெயின் ரோட்டில் பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலைமறியலும் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த வலங்கைமான் தாசில்தார் பரஞ்சோதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில்அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் மன்னார்குடி கும்பகோணம் மெயின் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது/
    Next Story
    ×