search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறப்பு குறைப்பு

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தப்படி கடந்த செப்டம்பர் 27-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததையடுத்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகியது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும்.

    நேற்று காலை 6 மணி நிலவரப்படி 10.66 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணன் கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட அணையில் 443 மில்லியன் கன அடி தண்ணீரும், வீராணம் ஏரியில் 881 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்த வலியுறுத்தி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு 2 நாட்களுக்கு முன் கடிதம் எழுதினார்.

    இதற்கிடையே 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், அங்கு பெய்து வரும் பலத்த மழையால் கண்டலேறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் நிறுத்தப்படாமல் நேற்று இரவு முதல் நீர் திறப்பு வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 340 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 217 கன அடி ஆகவும் வந்துகொண்டிருக்கிறது. செப்டம்பர் 21-ந் தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 5.720 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணிக்கு நீர்மட்டம் 34.96 கன அடியாக பதிவாகியது. 3,135 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 804 கன அடியாக வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேபோல் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 994 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    Next Story
    ×