
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரது தந்தையான சென்னையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து ஆள் மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவர்கள், 2 மாணவிகள் பெற்றோர் 6 பேர், புரோக்கர்கள் 3 பேர் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிரமருத்தூர் உன்னியப்பன்டே புரக்கால் பகுதியைச் சேர்ந்த ரசீத் (வயது 45) கடந்த 7-ந் தேதி தேனி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை வரை போலீசார் விசாரணைக்கு அனுமதி அளித்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து மதுரை டி.எஸ்.பி. வேல்முருகன், தேனி இன்ஸ்பெக்டர்கள் சித்ராதேவி ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற காவல் முடிந்து வருகிற 21-ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில், ரசீத் பெங்களூரில் தங்கி இருந்த போது பீகாரைச் சேர்ந்த புரோக்கர் தீபக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர் பிரகாஷ் சிங் என்பவரும் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களிடம் பணம் வாங்கி கொண்டு வேறு நபர்களை தேர்வு எழுத வைத்து முறைகேடு செய்துள்ளனர்.
இதன் மூலம் நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் பீகார் மற்றும் குஜராத் மாநில புரோக்கர்களுக்கும் தொடர்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை போலவே பீகார் மற்றும் குஜராத்திலும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகித்துள்ளனர்.
அடுத்தகட்டமாக ரசீத்துடன் தொடர்பில் இருந்த புரோக்கர்கள் மற்றும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.