
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தால் கொரோனாவில் இருந்து பொது மக்களை பாதுகாக்க முடியும் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து நம் நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமரும், மத்திய அரசும் நோய் பரவ ஆரம்பித்த காலம் முதல் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் தான் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பொது மக்களை பெருமளவு பாதுகாக்க முடிந்தது.
குறிப்பாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியில் நல்ல பயனளித்தது, வெற்றி கண்டது. மிக முக்கியமாக கொரோனாவினால் பொது மக்கள் தாக்கப்படாமல் இருக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை செய்யவும் மற்றும் பல்வேறு முன் களப்பணியாளர்கள் கொரோனாவுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டதும் மிகவும் பாராட்டத்தக்கது.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன் களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்துவது வரவேற்புக்குரியது.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலோ, அனுமதி பெற்றதிலோ, ஒத்திகையிலோ, தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படுவதிலோ எவ்வித அரசியலுக்கும் இடம் இருக்கக்கூடாது.
நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கிடைத்து கொரோனாவால் நம் நாட்டில் இனி பயம் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் வரும் 16-ந்தேதி தொடங்கி வைப்பதும், அதே நாளில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பதும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடும், தமிழகமும் வெற்றி பெற்று கொரோனாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வாழ வழி வகுக்கும்.
எனவே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்ற மத்திய அரசுக்கும், தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கும், பொது மக்களின் பாதுகாப்புக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்ற தமிழக அரசுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.