search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடக்கு விஜயநாராயணம் அருகே வடிவாள்புரத்தில் சிறுத்தை தாக்கியதில் இறந்த ஆடுகளை காணலாம்.
    X
    வடக்கு விஜயநாராயணம் அருகே வடிவாள்புரத்தில் சிறுத்தை தாக்கியதில் இறந்த ஆடுகளை காணலாம்.

    வடக்கு விஜயநாராயணம் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்- 15 ஆடுகளை கடித்துக்கொன்றது

    வடக்கு விஜயநாராயணம் அருகே மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை 15 ஆடுகளை கடித்துக் கொன்றது.
    இட்டமொழி:

    நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் சிறுத்தை தனது குட்டியுடன் நடமாடியதை பார்த்ததாக அப்பகுதியினர் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த ஆடுகள், மாடுகளை கடித்துக் கொன்றது.

    கடந்த மாதம் 29-ந்தேதி வடக்கு விஜயநாராயணத்தில் 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. பின்னர் கடந்த 7-ந்தேதி வடக்கு விஜயநாராயணம் அருகே வெங்கட்ராயபுரம் வீரனாஞ்சேரி தோட்டத்தில் 22 ஆடுகளையும், பெரியகுளம் குட்டத்தட்டப்பாறை தோட்டத்தில் 2 ஆடுகள், ஒரு பசுவின் கன்றுக்குட்டியையும் சிறுத்தை கடித்துக் கொன்றது.

    இதையடுத்து அப்பகுதியில் 3 இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா அமைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் சிறுத்தை சிக்கவில்லை.

    இந்த நிலையில் பரப்பாடி அருகே சவளைக்காரன்குளத்தைச் சேர்ந்த களக்குடி மகன் சுரேசுக்கு (வயது 30) சொந்தமான தோட்டம், வடக்கு விஜயநாராயணம் அருகே வடிவாள்புரத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் சுரேஷ் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவில் இந்த தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கு ஆட்டுக்கிடையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 15 ஆடுகளை கடித்துக் கொன்றது.

    நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்ற சுரேஷ் தனது ஆடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நெல்லை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அறிவுரையின்பேரில், வனச்சரக அலுவலர் கருப்பையா தலைமையில், வனவர் பிரகாஷ், வன காப்பாளர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தோட்டத்தில் பதிவான சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து வடக்கு விஜயநாராயணம் பகுதியில் ஆட்டுக்கிடை உள்ள தோட்டங்களில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், 2 இடங்களில் சிறுத்தையை பிடிக்கும் வகையில் கூண்டுகள் அமைக்கவும் ஏற்பாடு செய்தனர். இறந்த ஆடுகளை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

    மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தையால் பொதுமக்கள் தோட்டங்களுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×