search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு- ஹெரேன் பாலிடம் சி.பி.ஐ. விடிய விடிய விசாரணை

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹெரேன் பாலிடம் டி.எஸ்.பி. ரவி தலைமையிலான போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த 2019-ம் ஆண்டு சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்த்குமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இதனையடுத்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் (34), ஆச்சிப்பட்டியை சேர்ந்த பைக் பாபு (27), அ.சங்கம்பாளையத்தை சேர்ந்த ஹெரேன் பால் (29) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் கடந்த 5-ந் தேதி சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், பைக் பாபு ஆகியோர் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்து அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். ஆனால் ஹெரேன் பால் முறையாக பதில் அளிக்கவில்லை.

    இதனையடுத்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மகிளா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதற்காக ஹெரேன் பால் சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி அவரை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து ஹெரேன் பாலை சி.பி.ஐ. போலீசார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து டி.எஸ்.பி. ரவி தலைமையிலான போலீசார் விடிய விடிய ஹெரேன் பாலிடம் விசாரணை நடத்தினர். ஹெரேன் பாலிடம் சி.பி.ஐ. போலீசார் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எத்தனை பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வீடியோ எடுத்தீர்கள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். இதில் அவர் விசாரணைக்கு ஒத்துழைத்து பல்வேறு தகவல்களை அளித்ததாக கூறப்படுகிறது.

    எனவே இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்ததும் ஹெரேன்பால் கூறிய நபர்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    Next Story
    ×