search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    தொழிலாளியை கொன்ற டெய்லருக்கு ஆயுள் தண்டனை- சேலம் கோர்ட்டு தீர்ப்பு

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூலித்தொழிலாளியை கொலை செய்த டெய்லருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சின்ன சீரகாபாடியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தார்.

    இவருடைய மனைவி முருகேஸ்வரி (32). இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்தார்.

    இதே நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அருள் செல்வம் (35) என்பவரும் டெய்லராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இவர்களது கள்ளக்காதல் பெருமாளுக்கு தெரியவந்தது. இதையடுத்து மனைவி மற்றும் அருள்செல்வம் ஆகிய 2 பேரையும் அவர் கண்டித்து உள்ளார். ஆனால் இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெருமாளை கொலை செய்ய அருள்செல்வம் முடிவு செய்தார். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி அருள்செல்வம், பெருமாளை மது குடிக்க அழைத்து உள்ளார். இதையடுத்து இருவரும் வீரபாண்டி ஏரி பகுதிக்கு சென்று மது அருந்தினர்.

    போதை தலைக்கு ஏறியதும் அருள்செல்வம், பெருமாளை கீழே தள்ளி அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தனது நண்பரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி (33) உதவியுடன் பெருமாள் உடலை தூக்கி வீரபாண்டி ஏரியில் போட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெருமாளை கொலை செய்ததற்காக அருள் செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த பால்பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000-ம் அபராதமும் விதித்து நீதிபதி ஆபிரகாம் லிங்கன் தீர்ப்பு கூறினார்.
    Next Story
    ×