
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்காணிப்பாளர் பாண்டியன் அறையில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.88,500 பணம் மற்றும் ரூ.38 லட்சத்து 66 ஆயிரத்து 200 கணக்கில் வராத வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பாண்டியன் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.22 கோடி மதிப்புள்ள 3.81 கிலோ தங்கம் நகைகள், 3.343 கிலோ வெள்ளி பொருட்கள், 10.52 கேரட் வைரம், நிரந்தர வைப்பு நிதி கணக்கில் இருந்த ரூ.31 லட்சம் மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 இடங்களில் உள்ள சொத்துக்கள் என ரூ.10.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமழகத்தையே அதிரச்செய்த இந்த சம்பவத்தில் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க லஞ்சமாக நகை-பணத்தை வாங்கி குவித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் பாண்டியன் பெயரில் உள்ள வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திறந்து சோதனை நடத்தியபோது, அதில் இருந்து கணக்கில் வராத ரூ.55 லட்சத்து 500 ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், லாக்கரில் தடையில்லா சான்று வழங்க பாண்டியன் பரிந்துரையில் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
பாண்டியனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம். அங்கேயும் அவர் லஞ்சப்பணத்தில் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அது தொடர்பாகவும் விசாரணை நடத்த முடிவு செய்த சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் இன்று காலை புதுக்கோட்டை திருமயம் பசுமாட வீதியில் உள்ள பாண்டியன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர். வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும் திருமயத்தில் உள்ள வங்கிகளில் பாண்டியன் கணக்கு வைத்துள்ளாரா? லாக்கர்களில் நகை ஏதும் வைத்துள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்படி ஏதாவது அவர் வைத்திருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு சென்று லாக்கர்களை திறந்து சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இது மட்டுமின்றி சொந்த ஊர் என்பதால் அங்கு லஞ்ச பணத்தில் நிலம் வாங்கியுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு பிறகு பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.