
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.
இந்த எருது விடும் விழாவை காண வேப்பனஹள்ளி, சூளகிரி, ஓசூர், பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் திரண்டு வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உமாசேகர் என்பவரின் வீட்டு சுவரில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று எருது விடும் விழாவை பார்த்தனர். மேலும் கீழ்பகுதியிலும் சுமார் 20 பேர் நின்று வேடிக்கை பார்த்தனர்.
அந்த வீட்டின் சுவர் மீது இளைஞர்களும், பொதுமக்களும் ஏறி நின்றதால் திடீரென கட்டிடம் அதிக பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.
அப்போது கட்டிடத்தின் மேற் கூரையில் இருந்த 15-க்கும் மேற்பட்டோர் அப்படியே கீழே விழுந்தனர். மேலும் கட்டிடத்தின் கீழே நின்றிருந்த சிலரும் காயம் அடைந்தனர்.
இதில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நின்ற 9 வயது சிறுமி மேகாஸ்ரீ மற்றும் முனிபாலா (62) ஆகிய 2 பேரும் இடி பாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
இதில் கீதா (35), லாவண்யா (24), ஷோபா, ராமமூர்த்தி (20), நாகம்மா(35), அக்ஷயா (7), அருண் (24), நந்தினி (10), லோகேஷ் (10), அஸ்வதம்மா(60), ஜீவா (6), கலைவாணி (13), ராமரத்தினம் (38), லதா (35), நதியா (8) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் லேசான காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர்,டி.எஸ்.பி. சரவணன், வேப்பனஹள்ளி இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மற்றும் வேப்பனஹள்ளி தொகுதி முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும் எருதுவிடும் விழாவை முறையான அனுமதி பெறாமல் நடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த பத்மநாதன் (50), அம்மாசியப்பன் (65), திம்மராயப்பன் (50), முனிராஜ் (67), நாகராஜ் (51) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் 5 பேரும் கிருஷ்ணகிரி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் எருது விடும் விழாவை நடத்திய ஊர் தலைவர்கள் நாகராஜ், மற்றும் சிவா ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.