
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி தனது 5-ம் கட்ட பிரச்சாரத்தை கோவையில் நேற்று தொடங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் கோபியில் பெரியார் திடலில் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு அந்தியூர் தேரடிக்கு செல்லும் கமல்ஹாசன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். 7.45 மணிக்கு பவானி நகர் அந்தியூர் பிரிவில் மக்களை சந்தித்து பேசுகிறார். இரவு 8.15 மணிக்கு சித்தோடு நால்ரோட்டில் வேனில் நின்றவாறு பிரசாரம் செய்கிறார். 8.45 மணிக்கு ஈரோடு கனி ராவுத்தர் குளம், 9 மணிக்கு பி.பி. அக்ரஹாரம், 9.30 மணிக்கு கிருஷ்ணா தியேட்டர் அருகே பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். இத்துடன் ஈரோட்டில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பெருந்துறை ரோட்டில் உள்ள ஆலயமணி மஹாலில் கமல்ஹாசன் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து 11.15 மணிக்கு லக்காபுரம், 11.30 மணிக்கு மொடக்குறிச்சி, 11:45 மணிக்கு சிவகிரியிலும் பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் செல்கிறார்.