search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருப்பூரில் தறிகெட்டு ஓடிய லாரி கடைக்குள் புகுந்தது- பெண் பலி

    திருப்பூரில் இன்று அதிகாலை தறிகெட்டு ஓடிய லாரி, மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர்- அவினாசி சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் லாரி ஒன்று தறிகெட்டு ஓடியது. அந்த லாரி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவது போன்று வந்ததால் எதிரே வந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்றனர்.

    அனுப்பர்பாளையம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, அங்குள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் புகுந்தது. இதையடுத்து லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இந்த விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்களும், கடையும் லேசான சேதம் அடைந்தன. அதிகாலை நேரம் என்பதால் கடையில் ஆட்கள் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதை பார்த்த பொதுமக்கள் விரைந்து வந்து காயத்துடன் போராடியவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அனுப்பர் பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், லாரி மோதி உயிரிழந்த பெண் திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த தெய்வானை(வயது75) என்பது தெரியவந்தது.

    இவர் அவினாசியில் தனது உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தனது மகன் பழனிச்சாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதும், அப்போது தறிகெட்டு ஒடிய லாரி மோதியதில் தெய்வானை இறந்ததும் தெரியவந்தது.

    மேலும் லாரி வெள்ள கோவிலில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்தது தெரிந்தது. ஆனால் அதனை ஓட்டி வந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×