search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டியிட்டு கோரிக்கைகளை கேட்டறிந்த வேளாண் அதிகாரியை படத்தில் காணலாம்.
    X
    மண்டியிட்டு கோரிக்கைகளை கேட்டறிந்த வேளாண் அதிகாரியை படத்தில் காணலாம்.

    மழையால் சேதம் அடைந்த பயிர்கள்: இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல் - அதிகாரி மண்டியிட்டதால் பரபரப்பு

    துவரங்குறிச்சி அருகே மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரி மண்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    துவரங்குறிச்சி:

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கஞ்சநாயக்கன்பட்டி, கரடிப்பட்டி, வேலக்குறிச்சி, எண்டபுளி உள்ளிட்ட பகுதி மக்கள் விவசாயத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, சோளம் என பல்வேறு வகையான பயிர்களை நடவு செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விளைச்சலுக்கு வந்த பயிர்கள் அழுகி சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கே.சி.பழனிசாமி தலைமையில் சிங்கிலிப்பட்டி பிரிவு சாலை அருகே அழுகிய மற்றும் மீண்டும் முளைத்த பயிர்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேளாண்மைத்துறை அதிகாரி நிரஞ்சன் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது, வேளாண் அதிகாரி நிரஞ்சன் மண்டியிட்டு விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×