search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த தங்கமயில் என்பவாின் வீட்டில் பீரோவில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.
    X
    கொள்ளை நடந்த தங்கமயில் என்பவாின் வீட்டில் பீரோவில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

    வடமதுரை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

    வடமதுரை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி கம்பிளியம்பட்டியில் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வடமலை (வயது 75). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வடமலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வடமலையின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

    பின்னர் அவரது வீட்டின் எதிரே உள்ள அவரது உறவினரான தங்கமயில் (60) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். மேலும் மற்றொரு உறவினரான கரியக்காள் (60) வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பணம், நகை எதும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    நேற்று காலையில் எழுந்து பார்த்த வடமலை தனது வீடு மற்றும் உறவினர்கள் வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகணேஷ், பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் அந்த வீடுகளில் இருந்து காளியம்மன் கோவில் அருகே வரை ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

    அதனைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடுகளில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×