
வடகிழக்கு பருவமழை நீடித்து வருவதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் சாரல் மழையுமாக அனைத்து பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக கன்னடியன் கால்வாயில் 42 மில்லி மீட்டர் மழை இன்று காலை வரை பெய்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, பாளை, சேரன்மகாதேவி, அம்பை பகுதியில் கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 21.2. மில்லி மீட்டர் மழை இன்று காலை வரை பெய்துள்ளது. கடனாநதி, தென்காசி, ராமநதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையும், மற்ற இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 53.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கனமழையும், சாரல் மழையும் மாறி மாறி பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது நிரம்பிய பாபநாசம் அணை மீண்டும் வடகிழக்கு பருவமழையின் போது நிரம்பியது. 143 அடி மொத்த உயரம் கொண்ட பாபநாசம் அணையில் இன்று 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1760 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அணை பாதுகாப்பு கருதி 2,451 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுபோல மணிமுத்தாறு அணையும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிரம்பி உள்ளது.
118 அடி மொத்த உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 117.50 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,491 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் 455 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணை பாதுகாப்பை கருதி அணையின் சர்ப்ளஸ் வாட்டர் வெளியேறும் மேல் ஷட்டர் வழியாக வினாடிக்கு 909 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமுத்தாறு அணை நிரம்பினாலும் சர்ப்ளஸ் வாட்டர் வெளியேறும் மேல் ஷட்டர் திறக்கப்படவில்லை.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்ப்ளஸ் வாட்டர் வெளியேறும் மேல் ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் தண்ணீர் கல்லிடைக்குறிச்சி அருகே தாமிரபரணி ஆற்றில் கலந்து வெள்ளமாக பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே பாபநாசம் அணையில் இருந்தும் தாமிரபரணி ஆற்றில் 2,451 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் இன்று காலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேரன்மகாதேவி தரைப்பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.
குறுக்குத்துறை முருகன் கோவில் தண்ணீரில் மூழ்கியது. மேல் மண்டபமும், கோபுரமும் மட்டுமே வெளியே தெரிகிறது. தைப்பூச மண்டபமும் தண்ணீரில் மூழ்கியது.
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக செல்வதால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சில இடங்களில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகிறார்கள். கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதையும் பொருட்படுத்தாமல், ஏராளமான முருக பக்தர்கள் இன்று குளித்தனர். அப்போது தண்ணீர் வேகமாக வந்ததால் பலர் குளிப்பதை விட்டு விட்டு கரையேறினர்.
தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று காலை வெள்ளம் ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டியது. இதனால் இன்று காலை அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிக்கு வந்து குளிக்காமல் திரும்பி சென்றனர்.