
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஆட்டுச்சந்தை தென்மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் பிரசித்தி பெற்றது.
வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு நெல்லை, மதுரை, தென்காசி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை என பல்வேறு மாவட்டங்களில் ஆடுகளை வளர்ப்போர் தங்கள் ஆடுகளை எட்டயபுரத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அதே போல் இங்கிருந்த ஆட்டுக்குட்டிகளையும் அவர்கள் வாங்கி செல்வார்கள். எனவே இந்த சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்து வருவார்கள்.
சாதாரண நாட்களில் ரூ.2 கோடி ரூபாய் வரையிலும், ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக்காலங்களில் ரூ.4 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் இரவில் இருந்தே பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் அங்கு குவிய தொடங்கினர்.
பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதாலும், தற்போது பறவை காய்ச்சல் பீதியால் ஆட்டு இறைச்சிக்கு மவுசு கூடி உள்ளதாலும் பொதுமக்கள் பார்வை ஆட்டிறைச்சி மீது அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.
ஆடுகளின் விலையும் கடந்த சில வாரங்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் வியாபாரம் சற்று குறைந்து காணப்பட்டாலும் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆட்டுக்குட்டி முதல் பெரிய ஆடுகள் வரை எடைகளுக்கு ஏற்ப ரூ. 7 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று ரூ. 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து ஆட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை களை இழந்து காணப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே இருப்பதால் ஆடுகள் விற்பனை இன்று அதிகளவில் நடைபெற்றது. பறவை காய்ச்சல் காரணமாக ஆட்டு இறைச்சி விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. அதன் காரணமாக ஆடுகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆடுகள் விலை அதிகமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான கரிநாள் அசைவ விருந்துக்காக பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
ஆடுகள் விற்பனை போன்று, ஆடுகள் வளர்ப்புக்கு தேவையான கம்பு, அரிவாள் விற்பனையும் அதிகமாக நடந்தது. கடந்த பொங்கல் பண்டிகையை விட இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இனிவரும் காலங்களிலும் ஆடுகள் விற்பனை நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.