
புதுக்கோட்டை:
மனதை சுண்டி இழுத்து கட்டிப்போடும் வலிமையும், தன்மையும் இசைக்கு மட் டுமே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக பண்டைய காலம் தொட்டு தற்போதைய நாகரீக காலம் வரை தொடர்ந்து இசைக்கப்பட்டு வருவதில் நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் தனி இடம் உண்டு.
நாதத்தால் நாட்டையே வென்ற வரலாறு பற்றி நாம் அறிந்திருப்போம். மங்கள இசைக்கு மயங்காதோர் இருக்க முடியாது என்று கூறுமளவிற்கு இன்றளவும் கோவில்கள், திருவிழாக்கள், சுபமுகூர்த்தங்களில் இசைக்கப்படுவது நாதஸ்வரமும், தவிலும்தான். அந்த இசையை கற்றுக்கொள்வதில் ஆண்கள் மட்டுமே அளப்பரிய ஆர்வம் கொண்ட காலத்தில் ஒரு சிறுமியும் கற்று அதன் பெருமையால் தன்னையும், கற்றுத்தந்த குருநாதரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் நாகராஜ். தவில் இசைக்கலைஞரான இவர் தன்னை நாடி வந்தவர்களுக்கும் தவில் கலையை முறைப்படி கற்றுத்தருகிறார். இவர் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்தாலே தவில் இசையும், நாதஸ்வர இசையும் நம்மை வரவேற்கும்.
தான் கற்ற கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தருவதில் அதிக ஆர்வம் கொண்ட நாகராஜிடம் தவில் கற்க வந்தவர்களில் 9 வயது சிறுமியான நிஷாந்தினியும் ஒருவர். தனது உறவினராக நாராயணன் என்பவரது மகளான நிஷாந்தினியின் ஆர்வத்தை கண்டு வியந்த நாகராஜ் முறைப்படி அவருக்கு தவில் கற்றுத்தர தொடங்கினார். கற்றல் என்பதை விட அவர் கற்க தொடங்கிய விதமே தனித்துவமாக இருந்தது. ஆர்வம் என்பதைவிட அர்ப்பணிப்புடன் நிஷாந்தினி தவில் கலையை கற்றார்.
அவரது பெற்றோர் நாதஸ்வர, தவில் கலை ஞர்களின் வாரிசுகள் ஆவர். அந்த வழியில் நிஷாந்தினிக்கும் மரபு வழியாக கலையை கற்கும் ஆர்வம் வந்துள்ளதாக பயிற்சியாளரும், குருவுமான நாகராஜ் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், என்னிடம் ஏராளமானோர் தவில் கற்றுள்ளனர். அவர்களிடம் சில சமயம் நுணுக்கங்களை பற்றி கூறுகையில் தடுமாறிய நிலையே இருந்தது. ஆனால் சற்றும் தளராமல் தவிலை கற்பதில் நிஷாந்தினியின் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பார்த்து நான் வியந்து போனேன்.
தொடக்கத்தில் வயலின் மட்டுமே கற்றுக்கொண்ட நிஷாந்தினி கொரோனா விடுமுறை காலத்தை புத்தகம் படிப்பதோடு நிறுத்தி விடாமல் என்னிடம் வந்து தவில் கலையை கற்றார். காலை 7 மணிக்கு வரும் அவர் இரவு 7 மணி வரை (உணவு இடைவெளி தவிர்த்து) தொடர்ந்து தவில் கற்பதில் ஆர்வம் காட்டினார். ஒரே மாதத்தில் கற்றும் தேர்ந்தார்.
தவில் கற்பதில் ஆண்களே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை விஞ்சிய அறிவும், ஞானமும் நிஷாந்தினியிடம் உள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் இரண்டே மாதங்களில் கோவிலில் அரங்கேற்றம் செய்த நிஷாந்தினிக்கு தற்போது பல்வேறு கச்சேரிகளில் தவில் இசைக்க அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இதுபற்றி சிறுமி நிஷாந்தினி கூறுகையில், எனது மாமா நாகராஜ் தவில் இசைக்கும் போது அருகில் அமர்ந்து மெய்மறந்து ரசிப்பேன். அதுவே என்னை தவில் கற்க உந்து சக்தியாக அமைந்தது. நான் கேட்டவுடன் அவரும் கற்றுத்தர ஒப்புக்கொண்டு முறைப்படி பயிற்சி அளித்தார். நான் தவில் வித்வான்களான ஏ.கே.பழனிவேல், எம்.ஆர்.வாசுதேவன் ஆகியோரை போன்று வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
சிறுமியின் தந்தை நாராயணன் கூறுகையில், சிறு வயது முதலே நிஷாந்தினி எதுபோல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஆக நான் எப்போதும் தடையாக இருந்ததில்லை. ஆனால் அவர் எங்கள் மரபு வழி கலையான தவிலில் சாதிப்பார் என நினைக்கவில்லை. அவர் இந்த வயதிலேயே வித்வான் என்று அழைக்கப்படுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்றார்.