
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.15 மணிக்கு புறப்படும் மலைரெயில் குன்னூர் வழியாக காலை 11.55 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் மலைரெயில் மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதும், சாலைகளில் சிறிது மண்சரிவுகள் ஏற்படுவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2.15 மணிக்கு ஊட்டியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு மலைரெயில் குன்னூருக்கு புறப்பட்டது. மாலை 3.30 மணியளவில் குன்னூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்த மலைரெயில் நீராவி என்ஜினை மாட்டி கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட தயாரானது.
அந்த சமயம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழைக்கு ஹில்குரோவ்- கல்லாறு ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதுபற்றி அங்கிருந்த ஊழியர்கள் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ரெயில் புறப்பட்டு விட்டது. உடனடியாக மலைரெயில் கார்டுக்கு தகவல் கொடுத்து மலைரெயில் பாதிவழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மண்சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகி விட்டதால் தற்காலிகமாக பணியை நிறுத்தினர்.
பின்னர் பாதி வழியில் நிறுத்தப்பட்ட ஊட்டி மலைரெயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு சுற்றுலா பயணிகள் பஸ் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான தண்டவாளத்தில் சரிந்து கிடக்கும் மணல், கற்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும், தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும் இன்று ஒரு நாள் ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையேயான மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைரெயில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இன்று காலையும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சீதோஷ்ண நிலை மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.