search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கண்மூடித்தனமான தாக்குதல்

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது.
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதோடு அவர்களை கைது செய்தும் வருகிறது. இதனை தடுக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டாலும் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

    இந்த நிலையில் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்களில் சிலர் தங்கள் படகுகளை கச்சத்தீவு அருகே நிறுத்தி மீன் பிடித்தனர். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று எச்சரித்தனர்.

    இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட முற்பட்டனர். இருப்பினும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரது விசைப்படகும் சிறை பிடிக்கப்பட்டது.

    அதில் இருந்த மீனவர்கள் கிருபை, வளன் கவுசிக், மிக்கேயாஸ், சினிங்ஸ்டன், சாம்ஸ்டில்லர், மிஜான், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் துறைமுகம் கொண்டு சென்றனர்.

    இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இரவோடு இரவாக கரை திரும்பினர்.

    இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இந்திய எல்லையில்தான் மீன்பிடிக்கிறோம். ஆனால் இலங்கை கடற்படை எங்களை தொடர்ந்து தாக்கி வருகிறது.

    ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொரோனா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சேதமடைந்த படகு

    இந்த நிலையில் தற்போது 9 மீனவர்களை கைது செய்ததோடு படகையும் சிறைபிடித்து சென்றிருப்பது வேதனைக்குள்ளாக்கி உள்ளது என்றனர்.

    நேற்று முன்தினம் இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது. இலங்கை இறுதி போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இடிக்கப்பட்ட நினைவு தூணை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தை விட்டு போலீசார் வெளியேற வேண்டும். இதனை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளனர்.

    மேலும் நாளை இலங்கை வடக்கு-கிழக்கு பகுதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் மாநகர மேயர் மணிவண்ணன் நேரில் சென்று அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    இதன் காரணமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
    Next Story
    ×