
கரூர்:
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவல்சண்டை, மஞ்சு விரட்டு போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெறும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலையொட்டி போட்டிகள் தொடங்கி வெகு விமரிசையாக நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு கொரோனா விதி முறைகளை கடை பிடித்து போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று ஜரூராக வருகிறது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தளவில் பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அரவக்குறிச்சி, குளித்தலை, சின்னதாராபுரம், தோகைமலை ஆகிய இடங்களில் இந்த சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் நடைபெறும் சேவற்கட்டு என்படும் சேவல் சண்டை மிகவும் பிரபலமானது. இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சண்டை போடும் கோழியின் கால்களில் கத்தி கட்டி விஷம் தடவி போட்டி நடத்தியதாக புகார் வந்தது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் பூலாம்வலசு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றம் தலையிட்டு சில நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு போட்டி வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராமத்து இளைஞர்கள் செய்து வருகின்றனர். போட்டியில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சேவல் பிரியர்கள் தாங்கள் வளர்த்த சண்டை சேவல்களுடன் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக கடந்த சில நாட்களாக சேவல்களுக்கு சண்டை பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை கொடுத்து சண்டைக்கு தயார் செய்துள்ளனர். இந்த சேவல் கட்டுபோட்டி தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், பூலாம்வலசு போட்டிகளில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் தாங்கள் வளர்க்கும் சேவல்களுடன் வந்து போட்டியில் கலந்து கொள்வார்கள். இத்தகைய நிகழ்வு நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதனால் பொங்கல் பண்டிகையன்று எங்கள் பகுதி விழாக்கோலமாக இருக்கும் என்றனர்.
சேவல் சண்டைபோட்டி நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக போட்டியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை இன்னும் வெளியிடவில்லை. இன்று விதிமுறைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை கடைபிடித்து போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சண்டை சேவல் கண்காட்சி கரூரில் தொடங்கியது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சண்டை சேவல்களான செவலை, பேர்டு, பட்டா கொண்டை, நுலன், புதி, கருங்கால், மயில், காகம், செங்கருப்பு உள்ளிட்ட 300-க் கும் மேற்பட்ட சேவல்களை உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.
கண்காட்சியில் ஒரு சிலர் சேவல்களை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனைக்கு வைத்திருந்தனர். இவற்றை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சேவல் வளர்ப்பு ஆர்வலர்களும், பொதுமக்களும் பார்த்து சென்றனர்.
இதில் பார்வையாளர்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்வு செய்து அவற்றிற்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசு வழங்க உள்ளார்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை போட்டி நடத்தப்பட உள்ள நிலையில் போட்டி நடத்தப்பட உள்ள இடங்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.