
மதுரை:
மதுரை மூலக்கரை மூட்டா காலனி, கோபால்சாமி நகரை சேர்ந்தவர் ரிஷிவரன் (வயது 27). இவர் பூடான் நாட்டில் எம்.பி.ஏ. படித்துள்ளார். இவரது நண்பர் விஜய்.
இவர் புதுக்கோட்டையில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவருக்கு பிறந்த நாள் ஆகும். இதையொட்டி மதுரையில் உள்ள ஒட்டலில் ரிஷிவரனுக்கு விஜய் விருந்து வைத்தார். 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.
பின்னர் இரவு ரிஷிவரன் காரில் வீடு திரும்பினார். போதையில் அவர் காரை தாறுமாறாக ஓட்டி சென்றார். எல்லீஸ்நகர்-கென்னட் ரோடு சந்திப்பில் அரசு பஸ் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
மோட்டார் சைக்கிளில் வந்த அஜித்குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து நடந்த பிறகும் ரிஷிவரன், காரை நிறுத்தவில்லை. தொடர்ந்து மூலக்கரையில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த இறைச்சிக்கடை, பிளாஸ்டிக் பேக் கடை, பைக் சீட் கடை ஆகிய 3 கடைகளுக்குள் புகுந்தது. இதில்அந்த கடைகள் சேதம் அடைந்தன. கடைகள் மூடப்பட்டு இருந்ததால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அப்போது காருக்குள் வாலிபர் சீட் பெல்ட் அணிந்த நிலையில் சுயநினைவு இல்லாமல் இருந்தார். விபத்து ஏற்பட்டதும் காரில் உள்ள காற்றுப்பை (ஏர் பேக்) திறந்திருந்தது. இதனால் அந்த வாலிபரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வாலிபர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியது, பொதுமக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் காரில் இருந்த வாலிபரை வெளியே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தற்செயலாக அங்கு வந்த போலீசார் குடிபோதையில் இருந்த வாலிபரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் வாலிபர் குடிபோதையில் காரை ஓட்டி, கடைகளை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.