search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்த போது எடுத்த படம்.
    X
    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்த போது எடுத்த படம்.

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் நடந்தது.
    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்திட சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதையொட்டி ஏற்கனவே மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, சுகாதார பணியாளர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. பின்னர் அவர்களின் விவரங்கள் அனைத்தும் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடத்தப்பட்டன. நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமிற்கு, கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம், இணை இயக்குனர் (நலப்பணிகள்) சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 25 பேர் தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்றனர்.

    முன்னதாக தடுப்பூசி முகாமிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் காத்திருக்கும் அறை, கண்காணிப்பு அறை மற்றும் தடுப்பூசி அறையில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மெகராஜிடம், துணை இயக்குனர் சோமசுந்தரம் விளக்கினார்.

    அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-

    முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் முன் களபணியாளர்கள் 7,646 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசு இணையதளத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    13-ந் தேதிக்கு பிறகு தடுப்பூசி வர உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி எவ்வாறு போடப்படுகிறது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் விதத்தில் தடுப்பு மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி போடப்பட உள்ளது.

    இவ்வாறு கலெக்டர் மெகராஜ் கூறினார்.

    இதேபோல் நாமக்கல் நகர்புற சுகாதார நிலையம், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இதனிடையே தடுப்பூசி போட வருபவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே, தடுப்பூசி அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தடுப்பூசி போடப்பட்ட பிறகு ½ மணி நேரம் டாக்டர்களின் கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்படுவார்கள் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்கள் உடனுக்குடன் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
    Next Story
    ×