
புதுச்சேரி:
2016 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் மாநிலம் முழுவதும் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்தனர். முதல்- அமைச்சர் பொறுப்பேற்ற நாராயணசாமி 6 மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது நெல்லித் தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியில் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்- அமைச்சராக தொடர்கிறார்.
புதுவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
நாராயணசாமிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்த ஜான்குமாருக்கு காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்தது.
இதில், அவர் வெற்றி பெற்று காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஜான்குமார் அதிருப்தியில் இருந்து வந்தார்.
கடந்த மாதம் புதுவை மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை, ஜான்குமார் சந்தித்து பேசினார். இதனால் அவர் கட்சி மாறப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து ஜான்குமார் வகித்து வந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியில் தனது மகன் ரிச்சர்ட் போட்டியிடுவார் என ஜான்குமார் அறிவித்துள்ளார்.
முதல்- அமைச்சர் நாராயணசாமி தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் மகன் ரிச்சர்டை அறிமுகம் செய்து ஜான்குமார் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதியில் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு சென்றதால் நான் புகுந்த வீடான காமராஜர் நகர் தொகுதியில் 18 நாட்களில் பிரசாரம் செய்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதற்கு நெல்லித்தோப்பு தொகுதி நிர்வாகிகள்தான் காரணம்.
வரும் புதிய ஆட்சியில் உங்கள் விருப்பப்படி நான் அமைச்சராக வேண்டும். அதற்கு நமக்கு விசுவாசமான தொகுதிகள் தேவை. கடந்த தேர்தலில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற நான் காரணமாக இருந்தேன். 3 பேருக்கு உதவி செய்தேன். இதனால் எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் விசுவாசமாக இல்லை. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியான நெல்லித் தோப்பு, நான் போட்டியிட்டு வென்ற காமராஜர் நகர் தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதியில் எனது ரத்தமான மகன் ரிச்சர்ட் தேர்தலில் போட்டியிடுவார். என்னைப்போலவே அவர் தொகுதியையும், தொகுதி மக்களையும் நன்றாக பார்த்துக்கொள்வார். நானும், அவருடன் இணைந்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். என் மகன் வெற்றிக்கு நீங்கள் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதல்- அமைச்சர் நாராயணசாமி தொகுதியில் தனது மகன் போட்டியிடுவார் என பகிரங்கமாக ஜான்குமார் அறிவித்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் ஜான்குமார் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே கவர்னரை கண்டித்து நாராயணசாமி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போராட்டத்திலும் அவர் பங்கேற்று வருகிறார்.
சட்டமன்ற தேர்தலை முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் சந்திக்க உள்ள நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.