search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக பொதுக்குழு
    X
    அதிமுக பொதுக்குழு

    11 பேர் கொண்ட அ.தி.மு.க. வழிகாட்டு குழுவுக்கு பொதுக்குழு ஒப்புதல்

    அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்குகிறது.

    புரட்சித்தலைவி அம்மாவின் தியாகத்தையும், உழைப்பையும் போற்றும் வண்ணம், எழிலுற அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தை, உலகப்புகழ் பெற்றதாய் உருவாக்கி, திறந்து வைக்க இருக்கும் அம்மாவின் அரசுக்கு நன்றி, பாராட்டு.

    கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் பதவிக்கான வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளதை ஏகமனதாக ஏற்கிறோம். வெற்றி வாகை சூட கடுமையாக உழைப்போம்.

    கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தமைக்கு முதல்-அமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி.

    ஏழை, எளிய மக்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அளித்திட, தமிழ்நாடு முழுவதும் 2000 “முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்” எனும் மருத்துவ மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கும் அம்மாவின் கழக அரசுக்கு பாராட்டு.

    தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்றிட, சுழல்நிதி ஏற்படுத்தி இருக்கும் அம்மாவின் கழக அரசுக்கு பாராட்டு.

    தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட, பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.2,500 ரொக்கமும் வழங்கும் அம்மாவின் கழக அரசுக்கு பாராட்டு.

    ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவை தங்களுக்கு கிடைத்த அரசியல் நல்வாய்ப்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்சியினரும் மனதில் கருதி, ஆட்சி அமைக்கும் மனக்கோட்டையை கட்டி வந்தனர்,

    அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பெருகி வரும் மக்களின் பேராதரவு தி.மு.க.வினருக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், விரக்தியையும் தந்திருப்பது அவர்களின் பேச்சிலும், செயலிலும் வெளிப்படையாகத் தெரிகிறது.

    இவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ள இயலாத தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், அவரது கட்சியினரும் தங்கள் பேராசை நிறைவேறாத ஆசையாக மாறிவிட்ட சோகத்தில் பண்பாடற்ற முறையிலும், ஜனநாயக நெறிகளுக்கு எதிராகவும், பொது வாழ்வுக்கான பக்குவம் இல்லாமலும் செயல்படுவது அனைவரையும் முகம் சுளிக்கச்செய்கிறது.

    தமிழ்நாட்டு அரசியலை தரம் தாழச்செய்து, தனிமனித தாக்குதல்களிலும், தரக்குறைவான முறைகளிலும் செயல்படும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும், அவரது கட்சியினரையும் இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி, தொடர்ந்திட, அ.தி.மு.க.அரசு மீண்டும் அம்மா ஆட்சி அமைப்பது இன்றியமையாதது.

    எதிர்வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக அரசியலின் தீய சக்திகளாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டிய வன்முறை அராஜகக் கும்பல் மீண்டும் தலைதூக்குவதைத் தடுத்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான ஜனநாயக அரசு, அ.தி.மு.க. தலைமையில் மீண்டும் அமைந்திட அயராது உழைப்போம், உழைப்போம் என்று இப்பொதுக்குழு சூளுரைக்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×