search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

    வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்- எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர்கள் சந்திப்பு

    வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பா.ம.க. தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.
    சென்னை:

    வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    முதல் கட்டமாக சென்னையில் 4 நாட்கள் தொடர் போராட்டம், அதன் பிறகு மாவட்ட வாரியாக போராட்டம், பின்னர் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் மனு கொடுக்கும் போராட்டம், கடைசியாக மாநகராட்சி, நகராட்சி, கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தி மனு கொடுத்தார்கள்.

    தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சியான பா.ம.க. நடத்தி வரும் இந்த போராட்டம் அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

    ஆனால் இந்த கோரிக்கைக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் டாக்டர் ராமதாஸ் தற்போது அதை வென்றெடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் மூலம் வன்னியர்கள் மத்தியில் ஆதரவை மேலும் பெருக்கி கொள்ள முடியும் என்று பா.ம.க. கருதுகிறது.

    வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு, பா.ம.க.வுக்கு துணை முதல்வர் பதவி போன்ற கோரிக்கைகளால் கூட்டணியை உறுதி செய்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகிய 3 பேரை கொண்ட குழுவினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.

    சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை பற்றி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே அ.திமு.க. அமைச்சர்கள் இரண்டு பேர் கடந்த சிலதினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள். அவர்களிடம் இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகு மற்ற விசயங்களை பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தான் தற்போதைய சந்திப்பு நடந்துள்ளது. பேச்சு வார்த்தை விபரங்களை இரு கட்சி தரப்பிலும் வெளியிடவில்லை. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின்போது கூட்டணி பற்றியும் ஆலோசித்ததாகவும், டாக்டர் ராமதாசின் கோரிக்கைகள் பற்றி முதல்-அமைச்சரிடம் தெளிவுபடுத்தியதாகவும் அதற்கு முதல்-அமைச்சர் அளித்த பதிலை டாக்டர் ராமதாசிடம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரு கட்சிகளின் செயற்குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது. இதில் முக்கிய தீர்மானங்களை இரு கட்சிகளும் நிறைவேற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×