search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழிப்பண்ணை
    X
    கோழிப்பண்ணை

    கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, முட்டை கொண்டுவர தடை

    பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, முட்டை கொண்டுவர தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    கேரள மாநிலத்தின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த 4-ந் தேதி அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை முதன்மைச் செயலாளர் அறிவுரையின்படி, இந்நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள 26 தற்காலிக சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு குழுக்களால் கண்காணிக்கப்படுகிறது.

    இந்த குழுக்கள் மூலம், கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் முட்டைகள் தமிழகத்துக்குள் நுழைவது தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன. தமிழகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன.

    மேலும் மாநிலத்தில் எந்த் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்ட ஆயிரத்து 61 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோழி இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில், நோய்த்தாக்கம் மற்றும் இறப்பு குறித்து கண்காணிக்கப்படுகிறது. அனைத்து சரணாலயங்களிலும், விலங்கியல் பூங்காக்களிலும், இடம்பெயரும் பறவைகள், கழுகுகள் போன்றவற்றில் நோய் தாக்குதலோ, இறப்போ ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நாமக்கல் தேசிய முட்டை உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு் குழு, நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினரிடம், கேரள மாநிலத்தைத் தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் மற்றும் தீவனம் போன்ற பொருட்களைப் பெறுவதாக இருந்தால் உரிய அரசு அலுவலர்களிடம் இருந்து முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அனைத்து கோழி பண்ணைகளிலும் தீவிர பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென கோழிகள் அதிக அளவில் இறந்தால், அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளை உண்ணும்போது பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவாது. பொதுவாகவே இந்நோய், மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×