search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட்டு
    X
    ஐகோர்ட்டு

    ரேஷன் கடை அருகே வைக்கப்பட்டுள்ள ‘பேனர்களை' உடனே அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

    பொங்கல் பரிசு தொடர்பாக ரேஷன் கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பர பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கப்பணமும், பொங்கல் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வழங்கப்படும் ‘டோக்கனில்' முதல்-அமைச்சர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம் பெற தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் அச்சிடக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆளும் கட்சியினர் பேனர் வைப்பதாகவும், இதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., சார்பில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், “39 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆளுங்கட்சியினர் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர். ரேஷன் கடைகளுக்கு உள்ளேயும் துண்டுபிரசுரங்கள் வழங்குகின்றனர்” என்று வாதிட்டார்.

    இதற்குப பதிலளித்து வாதிட்ட அட்வகேட் ஜெனரல் விஜய நாராயண், “பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு உரிமை கோரி சில இடங்களில் எதிர்க்கட்சிகளும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தேர்தல் நேரத்தில் தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பேனர்கள் வைக்கப்படுகிறது” என்று கூறினார்.

    மேலும், “ரேஷன் கடைக்கு உள்ளே துண்டு பிரசுரங்கள் வழங்கப்படாது. வெளியே பேனர்கள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. அதேநேரம், பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்-அமைச்சர், மறைந்த முதல்-அமைச்சர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது” என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பரிசு தொகுப்பு பையில் உள்ள புகைப்படங்களை அகற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது.

    எனவே முதல்-அமைச்சர், மறைந்த முதல்-அமைச்சர் ஆகியோர் படங்களை தவிர வேறு எதுவும் அந்த தொகுப்பு பையில் இடம்பெறக்கூடாது. ரேஷன் கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் விளம்பரங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க கூடாது.

    பேனர்கள், அலங்கார வளைவுகள் உள்ளிட்டவைகளை பொது இடங்களில் வைக்கும் போது அது விபத்தில் முடிகிறது.

    எனவே, அனுமதி இல்லாமல் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

    இந்த உத்தரவு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.
    Next Story
    ×