
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரெயிலில் இருக்கைகள் மட்டுமே உள்ளன.
992 இருக்கைகளை கொண்ட இந்த ரெயிலில் அதிக பயணிகள் பயணிக்காததால் காலியாகவே ஓடின. வாரத்தில் வியாழக்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரெயிலில் கொரோனா காலத்தில் தினமும் 200 பேருக்கு குறைவாகவே பயணம் செய்தனர்.
இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கடந்த 2-ந்தேதி முதல் தேஜாஸ் ரெயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் வருகிற 10-ந்தேதி முதல் இந்த ரெயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
நிறுத்தப்பட்ட தேஜாஸ் சிறப்பு ரெயில் வியாழக்கிழமை தவிர 6 நாட்கள் 10-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும். இந்த ரெயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.