search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    ரவிச்சந்திரன் பரோல் கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் கேட்டு, அவரது தாயார் ராஜேஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 28 ஆண்டுகளாக ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்பேரில் அவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இந்தநிலையில் சிறைகளில் கொரோனா தொற்று பரவி வருவதால் ரவிச்சந்திரனுக்கு 3 மாத பரோல் விடுப்பு கேட்டு சிறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். மத்திய பாஸ்போர்ட் சட்டம், டெலிகிராப் சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் தண்டிக்கப்பட்டு உள்ளார். இந்த சட்டங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதால், மாநில அரசாங்கத்தால் பரோல் வழங்க முடியாது என மனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே இதே காரணத்தை கூறி, பரோல் மறுத்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதன்படி இந்த உத்தரவையும் ரத்து செய்து எனது மகனுக்கு 2 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் வக்கீல் திருமுருகன் ஆஜராகி, “மனுதாரர் மகன் உள்ளிட்டவர்கள் கொலை வழக்கின்படி தான் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறார்கள். பாஸ்போர்ட் மற்றும் டெலிகிராப் சட்டங்களின்படி அதிகபட்சம் சில ஆண்டுகள் தான் தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட அதிகாரம் இருக்கும்போது, பரோல் வழங்குவதற்கு மட்டும் அதிகாரம் இல்லை என கூறுவதை ஏற்க இயலாது. எனவே மனுதாரரின் மகனுக்கு பரோல் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×