
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “சென்னை மாநகரம் முழுவதும் பயன்படுத்தப்படாத மோட்டார் சைக்கிள்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிற்கும் இந்த வாகனங்களில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உருவாகின்றது. இந்த கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் மக்களிடையே பரவுகிறது. எனவே இந்த வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்தி, அவற்றை பொது ஏலம் விடுவதற்கும், டெங்கு கொசு பரவலை தடுப்பதற்கும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “நம் நாட்டை பொறுத்தவரை அடிப்படை சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. சுகாதாரத்தை பாதுகாக்கும் விதமான நடவடிக்கை எதுவும் எடுப்பதும் இல்லை. சாலைகள் எல்லாம் மழைநீரும், கழிவு நீரும் தேங்கி கிடக்கிறது” என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர், இந்த வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டால் டெங்கு கொசு அழிந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர், இந்த வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்தி பொது ஏலம் விடுவதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். டெங்கு கொசு உற்பத்தியாவதை 50 சதவீதம் தடுக்க முடியும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில், நகரங்களின் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில், குறிப்பாக மீனவ மக்கள் வாழும் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கும் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். பின்னர், இதுகுறித்து 4 வாரத்துக்குள் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல, சென்னையில் பயன்படுத்தப்படாமல் நடைபாதை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், டெங்கு பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்பது குறித்து மத்திய அரசின் வைரஸ் பரவல் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை 8 வாரத்துக்கு தள்ளி வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.