search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 வழங்கும் பணி - கலெக்டர் ஆய்வு

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகளில் 5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2, 500 ரொக்கம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    விழுப்புரம்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2, 500- ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று முதல் 5 லட்சத்து 86 ஆயிரத்து 92 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2, 500 ரொக்கம், 1,254 ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பணி தொடங்கியது. குடும்ப அட்டைதாரர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்றும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2, 500-ஐ பெற்றுச்சென்றனர்.

    விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் கலெக்டர் அண்ணாதுரை, நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2, 500 ரொக்கம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் வழங்கப்படும்.

    ரேஷன் கடைகளில் தெரு, பகுதி வாரியாக பரிசு தொகுப்பு வழங்கப்படும் விவரங்கள் அந்தந்த கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இவற்றை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பின்பு தான் வழங்கப்படும். இவற்றை வழங்குவதில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் புகார்கள் தெரிவிக்க தனியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04146 223265, 229884 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுதெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், குடிமைப்பொருள் தனி தாசில்தார் கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×