search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்றம்
    X
    சென்னை உயர்நீதிமன்றம்

    நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    சென்னை:

    நீலகிரி மாவட்டம் இத்தலார் என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த நீர்நிலை விளங்கி வந்ததால், இதனை ஆக்கிரமித்தவர்கள் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். 

    இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இத்தலார் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

    அப்போது சுமார் 150 குடும்பங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் நீர் நிலையானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கோடைக் காலங்களில் கடும் நீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை அலைக்கழித்ததாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

    இதைக் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் மனித இனமே அழிந்து போகும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இத்தலார் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அது தொடர்பான அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர். 
    Next Story
    ×