search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளுடன் வந்த நாகராஜ்.
    X
    தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளுடன் வந்த நாகராஜ்.

    1,000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மாற்றுத்திறனாளி - கலெக்டர் அலுவலகத்தில் மனு

    பணம் மதிப்பிழப்பு செய்தது தெரியாமல் 1,000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மாற்றுத்திறனாளி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் தனது மனைவி பஞ்சவர்ணத்துடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் தனது கையில் 7 பழைய 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்தார். இதுகுறித்து பஞ்சவர்ணத்திடம் கேட்டபோது, "எனது கணவருக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனக்கு வந்த உதவித்தொகை பணத்தை எனக்கே தெரியாமல் வீட்டில் சேமித்து வைத்திருந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதோடு அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அவருக்கு தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் என்னிடம் இந்த பணத்தை காண்பித்தார். அது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இப்போது இந்த பணத்தை எப்படி மாற்றுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதனால், கலெக்டரிடம் உதவி கேட்டு மனு அளிக்க வந்துள்ளோம். இந்த பணத்தை மாற்றிக் கொடுத்தால் எங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்" என்றார். பின்னர், அவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    Next Story
    ×