search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் பானர்ஜி
    X
    சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் பானர்ஜி

    சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவி ஏற்பு : கவர்னர், முதல்-அமைச்சர் வாழ்த்து

    சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து, கடந்த வாரம் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

    தமிழக கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்த இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வாசித்தார்.

    இதைத்தொடர்ந்து, பதவி ஏற்பு உறுதிமொழியை வாசித்து, தலைமை நீதிபதிக்கு, கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், ஐனாதிபதி பிறப்பித்த உத்தரவை புதிய தலைமை நீதிபதியிடம், கவர்னர் வழங்கினார்்.

    இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.சத்யநாராயணன் உள்ளிட்ட நீதிபதிகள், பிற துறை செயலாளர்கள், அமைச்சர்கள், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் கவர்னருமான பி்.சதாசிவமும் கலந்து கொண்டார்.

    பதவி ஏற்பு விழா முடிந்தவுடன், புதிய தலைமை நீதிபதிக்கு கவர்னர், முதல்-அமைச்சர், துணை முதல்- அமைச்சர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு தலைமை நீதிபதி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.

    பின்னர், அனைவருக்கும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
    Next Story
    ×