search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரை நகரில் 33 கிலோ கஞ்சா பறிமுதல்- 6 பேர் கைது

    மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை நகர் பகுதியில் ஆங்காங்கே கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக காவல்துறையினரும் பல்வேறு கட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் விதமாகவும், குற்றவாளிகளை கைது செய்யும் விதமாகவும் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மதுரை நகரின் பல்வேறு இடங்களில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காளிமுத்து நகரில் உள்ள மோட்டார் அறையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பொன்மேனி பகுதியை சேர்ந்த மகேந்திரன்(வயது 42) , மகபூப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 29 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுபோல், மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள குருநாதன் கோவில் பின்புறத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பகவதி (23), பிரபாகரன்(22), கருப்புசாமி(22), சரவணகுமார்(23) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் வரும் காலங்களிலும் தொடரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    Next Story
    ×