
புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் தாமரை எழுச்சி யாத்திரையின் நிறைவு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-
புதுச்சேரி சிறந்த ஆன்மிக பூமி. கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. புதுவையில் உள்ள காங்கிரஸ் அரசு மத்திய அரசின் திட்டங்கள் எதையும் இங்கு நிறைவேற்றவில்லை.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தான் புதுவையில் அமையும். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவை மக்களுக்கு கிடைக்கும். மத்திய அரசின் சிறப்பான திட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பதால் மக்கள் காங்கிரஸ் கட்சியை வெறுக்க தொடங்கி விட்டனர். அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஒரே பொய்யை கூறி வருகிறார். யூனியன் பிரதேசமான புதுவையை அண்டை மாநிலத்துடன் இணைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று கூறி வருகிறார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும். தொடர்ந்து பொய்களை கூறி வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு புதுவை மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.